- திருவொற்றியூர்
- கொச்சகக் கலிப்பா
- திருச்சிற்றம்பலம்
- நறைமணக்கும் கொன்றை நதிச்சடில நாயகனே
- கறைமணக்கும் திருநீல கண்டப் பெருமானே
- உறைமணக்கும் பூம்பொழில்சூழ் ஒற்றியப்பா உன்னுடைய
- மறைமணக்கும் திருஅடியை வாய்நிரம்ப வாழ்த்தேனோ.
- அலைவளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்திநிதம்
- தலைவளைக்கும் செங்கமலத் தாளுடையாய் ஆளுடையாய்
- உலைவளைக்கா முத்தலைவேல் ஒற்றியப்பா உன்னுடைய
- மலைவளைக்கும் கைம்மலரின் வண்மைதனை வாழ்த்தேனோ.
- ஆறடுத்துச் சென்றஎங்கள் அப்பருக்கா அன்றுகட்டுச்
- சோறெடுத்துச் சென்ற துணையே சுயஞ்சுடரே
- ஊறெடுத்தோர் காணரிய ஒற்றியப்பா உன்னுடைய
- நீறடுத்த எண்தோள் நிலைமைதனைப் பாரேனோ.
- சைவத் தலைவர் தவத்தோர்கள் தம்பெருமான்
- மெய்வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே
- உய்வைத்த உத்தமனே ஒற்றியப்பா உன்னுடைய
- தெய்வப் புகழ்என் செவிநிறையக் கேளேனோ.
- பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே
- தேடுகின்றோர் தேடநிற்கும் தியாகப் பெருமானே
- ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள்
- ஆடுகின்ற சேவடிகண் டல்லல்எலாம் தீரேனோ.
- பூணாக மாடப் பொதுநடிக்கும் புண்ணியனே
- சேணாகம் வாங்கும் சிவனே கடல்விடத்தை
- ஊணாக உள்ளுவந்த ஒற்றியப்பா மால்அயனும்
- காணாத நின்உருவைக் கண்டு களியேனோ.
- கொள்ளுவார் கொள்ளும் குலமணியே மால்அயனும்
- துள்ளுவார் துள்அடக்கும் தோன்றலே சூழ்ந்துநிதம்
- உள்ளுவார் உள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- தெள்ளுவார் பூங்கழற்கென் சிந்தைவைத்து நில்லேனோ.
- செவ்வண்ண மேனித் திருநீற்றுப் பேரழகா
- எவ்வண்ணம் நின்வண்ணம் என்றறிதற் கொண்ணாதாய்
- உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றியப்பா உன்வடிவம்
- இவ்வண்ணம் என்றென் இதயத் தெழுதேனோ.
- மன்றுடையாய் மால்அயனும் மற்றும்உள வானவரும்
- குன்றுடையாய் என்னக் குறைதவிர்த்த கோமானே
- ஒன்றுடையாய் ஊர்விடையாய் ஒற்றியப்பா என்னுடைய
- வன்றுடையாய் என்றுன் மலரடியைப் போற்றேனோ.
- குற்றம் செயினும் குணமாகக் கொண்டருளும்
- நற்றவர்தம் உள்ளம் நடுநின்ற நம்பரனே
- உற்றவர்தம் நற்றுணைவா ஒற்றியப்பா என்கருத்து
- முற்றிடநின் சந்நிதியின் முன்நின்று வாழ்த்தேனோ.
- வஞ்ச மடவார் மயக்கும் மயக்கொழிய
- நஞ்சம்அணி கண்டத்து நாதனே என்றென்று
- உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- கஞ்ச மலர்அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.
- இன்னல் உலக இருள்நடையில் நாள்தோறும்
- துன்னவரும் நெஞ்சத் துடுக்கழிய நல்லோர்கள்
- உன்னல்உறும் தெள்ளமுதே ஒற்றியப்பா என்வாய்உன்
- தன்அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.
- பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென்
- கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே
- ஒண்மணியே தேனேஎன் றொற்றியப்பா உன்தனைநான்
- பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ.
- மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார்
- ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற
- ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ.
- கல்லார்க் கிதங்கூறிக் கற்பழிந்து நில்லாமல்
- எல்லார்க்கும் நல்லவனே என்அரசே நல்தருமம்
- ஒல்லார் புரமெரித்த ஒற்றியப்பா உன்அடிக்கே
- சொல்லால் மலர்தொடுத்துச் சூழ்ந்தணிந்து வாழேனோ.
- கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்றவர்முன்
- அற்பஅற்றைக் கூலிக் கலையும் அலைப்பொழிய
- உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றியப்பா உன்னுடைய
- நற்பதத்தை ஏத்திஅருள் நல்நலந்தான் நண்ணேனோ.
- தந்தைதாய் மக்கள்மனை தாரம்எனும் சங்கடத்தில்
- சிந்தைதான் சென்று தியங்கி மயங்காமே
- உந்தைஎன்போர் இல்லாத ஒற்றியப்பா உன்அடிக்கீழ்
- முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.
- பொய்ஒன்றே அன்றிப் புறம்பொன்றும் பேசாத
- வையொன்றும் தீநாற்ற வாயார்க்கு மேலானேன்
- உய்என் றருள்ஈயும் ஒற்றியப்பா உன்னுடைய
- மெய்ஒன்று நீற்றின் விளக்கமது பாரேனோ.
- தூக்கமும்முன் தூங்கியபின் சோறிலையே என்னும்அந்த
- ஏக்கமுமே அன்றிமற்றோர் ஏக்கமிலா ஏழையனேன்
- ஊக்கமுளோர் போற்றுகின்ற ஒற்றியப்பா நின்அடிக்கீழ்
- நீக்கமிலா ஆனந்த நித்திரைதான் கொள்ளேனோ.
- வாதுபுரிந் தீன மடவார் மதித்திடுவான்
- போதுநிதம் போக்கிப் புலம்பும் புலைநாயேன்
- ஓதுமறை யோர்குலவும் ஒற்றியப்பா ஊரனுக்காத்
- தூதுசென்ற நின்தாள் துணைப்புகழைப் பாடேனோ.
- பொன்னாசை யோடும் புலைச்சியர்தம் பேராசை
- மன்னாசை மன்னுகின்ற மண்ணாசைப் பற்றறுத்தே
- உன்னாசை கொண்டேஎன் ஒற்றியப்பா நான்மகிழ்ந்துன்
- மின்னாரும் பொன்மேனி வெண்ற்றைப் பாரேனோ.
- கள்உண்ட நாய்போல் கடுங்காம வெள்ளமுண்டு
- துள்உண்ட நெஞ்சத் துடுக்கடக்கி அன்பர்கள்தம்
- உள்உண்ட தெள்அமுதே ஒற்றியப்பா உன்தனைநான்
- வெள்உண்ட நந்தி விடைமீதில் காணேனோ.
- பேராத காமப் பிணிகொண்ட நெஞ்சகனேன்
- வாராத ஆனந்த வாழ்வுவந்து வாழ்ந்திடவே
- ஓராதார்க் கெட்டாத ஒற்றியப்பா உன்னுடைய
- நீரார் சடைமேல் நிலவொளியைக் காணேனோ.
- வன்னெஞ்சப் பேதை மடவார்க் கழிந்தலையும்
- கன்னெஞ்சப் பாவியன்யான் காதலித்து நெக்குருகி
- உன்னெஞ்சத் துள்உறையும் ஒற்றியப்பா உன்னுடைய
- வென்னஞ் சணிமிடற்றை மிக்குவந்து வாழ்த்தேனோ.
- புண்ணியமோர் போதும் புரிந்தறியாப் பொய்யவனேன்
- எண்ணியதோர் எண்ணம் இடர்இன்றி முற்றியிட
- உண்ணிலவு நல்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- தண்ணிலவு தாமரைப்பொன் தாள்முடியில் கொள்ளேனோ.
- நன்றிதுஎன் றோர்ந்தும்அதை நாடாது நல்நெறியைக்
- கொன்றிதுநன் றென்னக் குறிக்கும் கொடியவன்யான்
- ஒன்றுமனத் துள்ஒளியே ஒற்றியப்பா உன்னுடைய
- வென்றி மழுப்படையின் மேன்மைதனைப் பாடேனோ.
- மண்கிடந்த வாழ்வின் மதிமயக்கும் மங்கையரால்
- புண்கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம்அற
- ஒண்கிடந்த முத்தலைவேல் ஒற்றியப்பா நாரணன்தன்
- கண்கிடந்த சேவடியின் காட்சிதனைக் காணேனோ.
- கூட்டுவிக்குள் மேல்எழவே கூற்றுவன்வந் தாவிதனை
- வாட்டுவிக்கும் காலம் வருமுன்னே எவ்வுயிர்க்கும்
- ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றியப்பா நீஉலகை
- ஆட்டுவிக்கும் அம்பலத்துன் ஆட்டமதைப் பாரேனோ.
- மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன்
- பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே
- உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய
- தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ.
- சீலம்அற நிற்கும் சிறியார் உறவிடைநல்
- காலம்அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்தம்
- ஓலம்அற நஞ்சருந்தும் ஒற்றியப்பா உன்னுடைய
- நீல மணிமிடற்றின் நேர்மைதனைப் பாரேனோ.
- சீர்புகழும் மால்புகழும் தேவர்அயன் தன்புகழும்
- யார்புகழும் வேண்டேன் அடியேன் அடிநாயேன்
- ஊர்புகழும் நல்வளங்கொள் ஒற்றியப்பா உன்இதழித்
- தார்புகழும் நல்தொழும்பு சார்ந்துன்பால் நண்ணேனோ.
- ஆதவன்தன் பல்இறுத்த ஐயற் கருள்புரிந்த
- நாதஅர னேஎன்று நாத்தழும்பு கொண்டேத்தி
- ஓதவள மிக்கஎழில் ஒற்றியப்பா மண்ணிடந்தும்
- மாதவன்முன் காணா மலர்அடிக்கண் வைகேனோ.
- கல்லைப் புறங்கண்ட காய்மனத்துக் கைதவனேன்
- தொல்லைப் பழவினையின் தோய்வகன்று வாய்ந்திடவே
- ஒல்லைத் திருவருள்கொண் டொற்றியப்பா உன்னுடைய
- தில்லைப் பொதுவில் திருநடனம் காணேனோ.
- கடையவனேன் கன்மனத்தேன் கைதவனேன் வஞ்ச
- நடையவனேன் நாணிலியேன் நாய்க்கிணையேன் துன்பொழிய
- உடையவனே உலகேத்தும் ஒற்றியப்பா நின்பால்வந்
- தடையநின்று மெய்குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.
- வாதை மயல்காட்டும் மடவார் மலக்குழியில்
- பேதை எனவீழ்ந்தே பிணிஉழந்த பேயடியேன்
- ஓதை கடற்கரைவாய் ஒற்றியப்பா வாழ்த்துகின்றோர்
- தீதை அகற்றும்உன்றன் சீர்அருளைச் சேரேனோ.
- பொய்யர்க் குதவுகின்ற புன்மையினேன் வன்மைசெயும்
- வெய்யற் கிரிமியென மெய்சோர்ந் திளைத்தலைந்தேன்
- உய்யற் கருள்செய்யும் ஒற்றியப்பா உன்அடிசேர்
- மெய்யர்க் கடிமை செய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ.