- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- வார்க்கொண் மங்கையர் முலைமலைக் கேற்றி
- மறித்தும் அங்கவர் மடுவினில் தள்ளப்
- பார்க்கின் றாய்எனைக் கெடுப்பதில் உனக்குப்
- பாவ மேஅலால் பலன்சிறி துளதோ
- ஈர்க்கின் றாய்கடுங் காமமாம் புலையா
- இன்று சென்றுநான் ஏர்பெறும் ஒற்றி
- ஊர்க்குள் மேவிய சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
- குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
- கடிய வஞ்சனை யால்எனைக் கலக்கம்
- கண்ட பாவியே காமவேட் டுவனே
- இடிய நெஞ்சகம் இடர்உழந் திருந்தேன்
- இன்னும் என்னைநீ ஏன்இழுக் கின்றாய்
- ஒடிவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
- பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
- வாதை உற்றிட வைத்தனை ஐயோ
- மதியில் காமமாம் வஞ்சக முறியா
- ஏதம் நீத்தருள் அடியர்தம் சார்வால்
- எழுகின் றேன்எனை இன்னும்நீ இழுக்கில்
- ஓதும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கோவம் என்னும்ஓர் கொலைப்புலைத் தலைமைக்
- கொடிய னேஎனைக் கூடிநீ நின்ற
- பாவ வன்மையால் பகைஅடுத் துயிர்மேல்
- பரிவி லாமலே பயன்இழந் தனன்காண்
- சாவ நீயில தேல்எனை விடுக
- சலஞ்செய் வாய்எனில் சதுர்மறை முழக்கம்
- ஓவில் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- சார்ந்த லோபமாம் தயையிலி ஏடா
- தாழ்ந்தி ரப்பவர் தமக்கணு அதனுள்
- ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய்
- இரக்கின் றோர்தரின் அதுகொளற் கிசைவாய்
- சோர்ந்தி டாதுநான் துய்ப்பவும் செய்யாய்
- சுகமி லாதநீ தூரநில் இன்றேல்
- ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மோகம் என்னும்ஓர் மூடரில் சிறந்தோய்
- முடிவி லாத்துயர் மூலஇல் ஒழுக்கில்
- போகம் என்னும்ஓர் அளற்றிடை விழவும்
- போற்று மக்கள்பெண் டன்னைதந் தையராம்
- சோக வாரியில் அழுந்தவும் இயற்றிச்
- சூழ்கின் றாய்எனைத் தொடர்ந்திடேல் தொடரில்
- ஓகை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- மதம்எ னும்பெரு மத்தனே எனைநீ
- வருத்தல் ஓதினால் வாயினுக் கடங்கா
- சிதமெ னும்பரன் செயலினை அறியாய்
- தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம்
- இதம றிந்தனம் எமக்கினி ஒப்பார்
- யாவர் என்றெனை இழிச்சினை அடியார்க்
- குதவும் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- அமைவ றிந்திடா ஆணவப் பயலே
- அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண்
- எமைந டத்துவோன் ஈதுண ராமல்
- இன்று நாம்பரன் இணையடி தொழுதோம்
- கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம்
- கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல்
- உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- கருமை யாம்அகங் காரமர்க் கடவா
- கடைய னேஉனைக் கலந்தத னாலே
- அருமை யாகநாம் பாடினோம் கல்வி
- அறஅ றிந்தனம் அருளையும் அடைந்தோம்
- இருமை இன்பமும் பெற்றனம் என்றே
- எனைம தித்துநான் இழிவடைந் தனன்காண்
- ஒருமை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.
- வெண்மை சேர்அகங் காரமாம் வீணா
- விடுவி டென்றனை வித்தகம் உணராய்
- தண்மை இன்றிதற் கிதுஎனத் துணிந்தென்
- தனையும் சாய்ப்பது தகவென நினைத்தாய்
- அண்மை நின்றிடேல் சேய்மைசென் றழிநீ
- அன்றி நிற்றியேல் அரிமுதல் ஏத்தும்
- உண்மை ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால்
- உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே.