- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்
- உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்
- வாதி யம்புறும் வஞ்சகர் உடனே
- வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி
- ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்
- அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்
- தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்
- கயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்
- மல்இ கந்தவாய் வாதமிட் டுலறி
- வருந்து கின்றதுன் மார்க்கத்தை நினைக்கில்
- இல்இ கந்தஎன் மீதெனக் கேதான்
- இகலும் கோபமும் இருக்கின்ற தானால்
- தில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே
- காலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்
- செய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்
- செய்வ தென்னைநின் திருவருள் பெறவே
- எய்த வத்திரு அருளெனக் கிரங்கி
- ஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே
- செய்த வத்திரு மடந்தையர் நடனம்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்
- அன்னை என்பர்கள் அழவலி இல்லாக்
- கொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்
- குற்றம் அன்றது மற்றவள் செயலே
- தொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே
- துட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்
- செழுது மாதவி மலர்திசை மணக்கத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- உள்ளி யோஎன அலறிநின் றேத்தி
- உருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்
- வள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்
- மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்
- வெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க
- விரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்
- தெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- விருப்பி லேன்திரு மால்அயன் பதவி
- வேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்
- மருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்
- மதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்
- ஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்
- உள்ளம் எப்படி அப்படி அறியேன்
- திருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- நிலையி லாஉல கியல்படும் மனத்தை
- நிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்
- விலையி லாமணி யேஉனை வாழ்த்தி
- வீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்
- அலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்
- அற்ப னேன்திரு அருளடை வேனே
- சிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- காயம் என்பதா காயம்என் றறியேன்
- கலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்
- சேய நன்னெறி அணித்தெனக் காட்டும்
- தெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்
- தூய நின்அடி யவருடன் கூடித்
- தொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்
- தீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- புன்னு னிப்படும் துளியினும் சிறிய
- போகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்
- என்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்
- என்செய் கேன்எனை என்செயப் புகுகேன்
- மின்னி னில்பொலி வேணியம் பெருமான்
- வேற லேன்எனை விரும்பல்உன் கடனே
- தென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.
- அடிய னேன்அலன் என்னினும் அடியேன்
- ஆக நின்றனன் அம்மைஇம் மையினும்
- கடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்
- கடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா
- பொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே
- புன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே
- செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே
- திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.