- திருவொற்றியூரும் திருத்தில்லயும்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- சிந்தை நொந்துநொந் தயர்கின்றேன் சிவனே
- செய்வ தோர்ந்திலேன் தீக்குண முடையேன்
- வந்து நின்னடிக் காட்செய என்றால்
- வஞ்ச நெஞ்சம்என் வசம்நின்ற திலையே
- எந்தை நின்னருள் உண்டெனில் உய்வேன்
- இல்லை என்னில்நான் இல்லைஉய்ந் திடலே
- அந்தி வான்நிறத் தொற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மாய நெஞ்சமோ நின்னடி வழுத்தா
- வண்ண மென்தனை வலிக்கின்ற ததனால்
- தீயன் ஆயினேன் என்செய்வேன் சிவனே
- திருவ ருட்குநான் சேயனும் ஆனேன்
- காய வாழ்க்கையில் காமமுண் டுள்ளம்
- கலங்கு கின்றனன் களைகண்மற் றறியேன்
- ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- உன்னை உன்னிநெக் குருகிநின் றேத்த
- உள்ளம் என்வசம் உற்றதின் றேனும்
- என்னை ஆளுதல் உன்கடன் அன்றேல்
- இரக்கம் என்பதுன் னிடத்திலை அன்றோ
- முன்னை வல்வினை முடித்திடில் சிவனே
- மூட னேனுக்கு முன்னிற்ப தெவனோ
- அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- என்ன நான்சொலி நிறுத்தினும் நில்லா
- தேகு கின்றதிவ் ஏழையேன் மனந்தான்
- உன்ன தின்னருள் ஒருசிறி துண்டேல்
- ஒடுக்கி நிற்பனால் உண்மைமற் றின்றேல்
- இன்ன தென்றறி யாமல இருளில்
- இடர்கொள் வேன்அன்றி என்செய்வேன் சிவனே
- அன்ன துன்செயல் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- பாவி நெஞ்சம்என் பால்இரா தோடிப்
- பாவை யார்மயல் படிந்துழைப் பதனால்
- சேவி யாதஎன் பிழைபொறுத் தாளும்
- செய்கை நின்னதே செப்பலென் சிவனே
- காவி நேர்விழி மலைமகள் காணக்
- கடலின் நஞ்சுண்டு கண்ணன்ஆ தியர்கள்
- ஆவி ஈந்தருள் ஒற்றிஎம் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மூட நெஞ்சம்என் மொழிவழி நில்லா
- மோக வாரியின் முழுகுகின் றதுகாண்
- தேட என்வசம் அன்றது சிவனே
- திருவ ருட்கடல் திவலைஒன் றுறுமேல்
- நாட நாடிய நலம்பெறும் அதனால்
- நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும்
- ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப் புலியூர்
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- கலங்கு கின்றஎன் கண்உன தருள்ஓர்
- கடுகின் எல்லைதான் கலந்திடு மானால்
- விலங்கு கின்றஎன் நெஞ்சம்நின் றிடுமால்
- வேறு நான்பெறும் வேட்கையும் இன்றால்
- மலங்கு கின்றதை மாற்றுவன் உனது
- மலர்ப்பொன் தாளலால் மற்றிலன் சிவனே
- அலங்கு கின்றசீர் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- மறைவ தென்னையும் மறைப்பது பொல்லா
- வஞ்ச நெஞ்சமென் வசப்படல் இலைகாண்
- இறைவ நின்னருட் கென்செய்வோம் எனவே
- எண்ணி எண்ணிநான் ஏங்குகின் றனனால்
- உறைவ துன்னடி மலர்அன்றி மற்றொன்
- றுணர்ந்தி லேன்இஃ துண்மைநீ அறிதி
- அறைவ தென்னநான் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- ஒருக ணப்பொழு தேனுநின் அடியை
- உள்கி டாதுளம் ஓடுகின் றதனால்
- திருக ணப்பெறும் தீயனேன் செய்யும்
- திறம்அ றிந்திலேன் செப்பலென் சிவனே
- வருக ணத்துடல் நிற்குமோ விழுமோ
- மாயு மோஎன மயங்குவேன் தன்னை
- அருக ணைத்தருள் ஒற்றியூர் இறையே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.
- யாது நின்கருத் தறிந்திலேன் மனமோ
- என்வ சப்படா திருத்தலை உரைத்தேன்
- தீது செய்யினும் பொறுத்தெனைச் சிவனே
- தீய வல்வினைச் சேர்ந்திடா வண்ணம்
- பாது காப்பதுன் பரம்இன்றேல் பலவாய்ப்
- பகர்தல் என்னகாண் பழிவரும் உனக்கே
- ஆது காண்டிஎம் ஒற்றியூர் அரசே
- அம்ப லத்தினின் றாடல்செய் அமுதே.