- திருவொற்றியூர்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- திருச்சிற்றம்பலம்
- இன்று நின்றவர் நாளைநின் றிலரே
- என்செய் வோம்இதற் கென்றுளம் பதைத்துச்
- சென்று நின்றுசோர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிவனே
- நன்று நின்துணை நாடக மலர்த்தாள்
- நண்ண என்றுநீ நயந்தருள் வாயோ
- பொன்றல் இன்றிய எழில்ஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன்
- மருவும் நின்அருள் வாழ்வுற அடையாச்
- சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- வறுமை யாளனேன் வாட்டம்நீ அறியா
- வண்ணம் உண்டுகொல் மாணிக்க மலையே
- பொறுமை யாளனே ஒற்றிஅம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- உய்ய வல்லனேல் உன்திரு அருளாம்
- உடைமை வேண்டும்அவ் உடைமையைத் தேடல்
- செய்ய வல்லனோ அல்லகாண் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- பெய்ய வல்லநின் திருவருள் நோக்கம்
- பெறவி ழைந்தனன் பிறஒன்றும் விரும்பேன்
- பொய்யி தல்லஎம் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- வெல்லு கின்றனர் வினைப்புல வேடர்
- மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம்
- செல்லு கின்றன ஐயவோ சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும்
- தூர நின்றனை ஈரமில் லார்போல்
- புல்லு கின்றசீர் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின்
- றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில்
- தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக்
- கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே
- பூறு வங்கொளும் ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- கந்த மும்மல ரும்என நின்றாய்
- கண்டு கொண்டிலேன் காமவாழ் வதனால்
- சிந்தை நொந்தயர் கின்றனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- எந்த நல்வழி யால்உனை அடைவேன்
- யாதுந் தேர்ந்திலேன் போதுபோ வதுகாண்
- புந்தி இன்பமே ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- அல்லல் என்னைவிட் டகன்றிட ஒற்றி
- அடுத்து நிற்கவோ அன்றிநற் புலியூர்த்
- தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஒல்லை இங்குவா என்றருள் புரியா
- தொழிதி யேல்உனை உறுவதெவ் வணமோ
- புல்லர் மேவிடா ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- ஞால வாழ்க்கையை நம்பிநின் றுழலும்
- நாய்க ளுக்கெலாம் நாயர சானேன்
- சீலம் ஒன்றிலேன் திகைக்கின்றேன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- ஏல நின்அருள் ஈதியேல் உய்வேன்
- இல்லை யேல்எனக் கில்லைஉய் திறமே
- போல என்றுரை யாஒற்றி அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது
- சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது
- சித்தம் என்னள வன்றது சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- நித்தம் நின்னடி அன்றிஒன் றேத்தேன்
- நித்த னேஅது நீஅறி யாயோ
- புத்த ருந்தமிழ் ஒற்றியூர் அரசே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- தத்து மத்திடைத் தயிரென வினையால்
- தளர்ந்து மூப்பினில் தண்டுகொண் டுழன்றே
- செத்து மீளவும் பிறப்பெனில் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- தொத்து வேண்டும்நின் திருவடிக் கெனையே
- துட்டன் என்றியேல் துணைபிறி தறியேன்
- புத்தை நீக்கிய ஒற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.
- பரிந்தி லேன்அருட் பாங்குறும் பொருட்டாய்ப்
- பந்த பாசத்தைப் பறித்திடும் வழியைத்
- தெரிந்தி லேன்திகைப் புண்டனன் சிவனே
- செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன்
- விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும்
- வெய்ய மாயையில் கையற வடைந்தே
- புரிந்து சார்கின்ற தொற்றியம் பரனே
- போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே.